top of page

பேழைக்குள் ஏந்திழை - அண்டன் செகாவ்

Updated: 5 days ago

The Woman in the Case | Anton Chekhov

தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி | Translated by Kannaiyan Daksnamurthy

Illustration: Robert Dance 1966     
Illustration: Robert Dance 1966     

இசைக்கலைஞன் ஸ்மிச்கோவ் நகரத்திலிருந்து ஒரு கிராமத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான். அங்கே நிகழவிருந்த பிபுலோவ் என்ற சீமானின் திருமண நிச்சயதார்த்த விழாவின் இசை–நடன நிகழ்ச்சியில் அவன் டபுள்–பேஸ் (பெரிய வயலினை ஒத்த இசைக்கருவி) வாசிக்கவேண்டும். மிகவும் பெரிதாக இருக்கும் அந்த இசைக்கருவியைத் திணித்து மூடியிருந்த பேழை, அதாவது தோலால் ஆன பெட்டி, அவனுடைய முதுகுச் சுமையாக இருந்தது. ரம்மியமாக நெளிந்து சுழித்து ஓடிக்கொண்டிருந்த ஆற்றங்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தவன் ஒரு கணம் யோசித்தான் :

“ஒரு குளியல் போடலாமா?”

ரொம்பவும் யோசிக்காமல் உடனே தன் ஆடைகளைக் களைந்துவிட்டுக் குளிர்ந்த நீரோட்டத்தில் தன் மேனியை முழுக்கினான். சௌந்தரியமான அந்திமாலைப் பொழுதின் சிருங்காரத்தில் ஸ்மிச்கோவின் மதி மயங்கியது. சுமார் நூறு அடி தூரம் நீந்திச் சென்றதும், ஆற்றங்கரையின் சரிவில் அமர்ந்தபடி அழகான இளம்பெண் ஒருத்தி தூண்டில் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன் இதயம் பூரித்துக் களித்தது. பால்யத்து நினைவலைகள், கடந்த காலத்துச் சம்பவங்கள், காமக்கிளர்ச்சி… எனக் கலவையான உணர்வுகள் மீதூர ஒரு கணம் அப்படியே மூச்சுவிடவும் மறந்து தன்னிலை அழிந்தான். இனிமேலும் தனக்குக் காதல் முகிழ்க்காது என்றே முடிவுக்கு வந்திருந்தவன் அவன். உயிருக்கு உயிராய் நேசித்த அவனுடைய காதல் மனைவி இசைக்குழுவில் இருந்த சக வாத்தியக்காரன் ஒருவனுடன் ஓடிப்போன பிறகு அவனுக்கு மனிதர்கள் மீதே  நம்பிக்கை போய்விட்டதுடன், எல்லாரையுமே வெறுத்து ஒதுக்கித் தனிமையிலேயே வாழ்ந்திருந்தான்.

“சே! என்ன வாழ்க்கை இது!” என்று பலதடவை தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன்.  “எதற்காக வாழ்கிறேன்?” “இது மாயை, கொடுங்கனவு….”

தூக்கத்தில் இருந்த அந்த அழகியை (அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனிக்க சிரமப்பட வேண்டியதில்லை) நின்று கவனித்தவனின் இதயத்தில் காதல் போன்றதொரு உணர்வு திடீரென்று தன்னிச்சையாய்த் தோன்றியதை உணர்ந்தான். கொஞ்ச நேரம் அவளையே வெறித்துப்பார்த்தபடி அந்த அழகைக் கண்களால் விழுங்கினான்.

அதுவே போதும் என்று எண்ணியபடியே பெருமூச்சு விட்டான். “கண்கொள்ளா இந்தக் காட்சிக்கு விடை தரவேண்டியதுதான்! சீமான் வீட்டு ஆர்க்கெஸ்ட்ராவுக்குப் போகவேண்டும், நேரமாகிவிட்டது”.

மீண்டும் ஒருகணம் நின்று அந்த அழகியை ஏறிட்டவன், நீச்சலைத் தொடர எத்தனித்த போது, மின்னலென ஒரு யோசனை பளிச்சிட்டது.

“என்னை அவள் மறக்காதபடிக்கு நான் ஏதேனும் ஒன்றைச் செய்யவேண்டும். அவளுடைய தூண்டிலில் எதையாவது மாட்டிவிடவேண்டும். யாரென்று தெரியாத ஒருவனிடம் இருந்து அவளுக்கு ஆச்சர்யம் ஏற்படவேண்டும்”.

ஸ்மிச்கோவ் சத்தமின்றி நீந்திக் கரைக்குப் போனான். தரையிலும் தண்ணீரிலும் இருந்த சில பூக்களைக் கொத்தாகப் பறித்து அவற்றைப் படர்ந்து கிடந்த கொடியால் சேர்த்துக்கட்டி, அந்த அழகியின் தூண்டில் முள்ளில் கோர்த்துவிட்டான்.

அந்தப் பூங்கொத்து அப்படியே தண்ணீரில் அமிழவும், தூண்டிலின் மிதவையும் முழுகிவிட்டது.

இயற்கை நியதிப்படியும், நம் கதாநாயகனின் சமூக அந்தஸ்தைப் பொறுத்தும் இந்தப் புள்ளியில் கதை முடிந்தாகவேண்டும். ஆனால், கதாசிரியரின் விதியை மாற்ற முடியாதல்லவா? கதாசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் பிடிபடாத சந்தர்ப்பச் சூழலால், பூங்கொத்துடன் சிருங்காரம் முற்றுப்பெறவில்லை. எதார்த்தத்தை மீறிய சம்பவங்களால், அந்தச் செல்வச் சீமாட்டியின் வாழ்வில் எளிய இசைக்கலைஞன் முக்கியமானதொரு  பங்காற்றும்படியாகி விட்டது.

ஸ்மிச்கோவ் நீந்திக் கரைக்கு வந்தபோது இடிவிழுந்தது போலாகிவிட்டான்: அவனுடைய உடுப்புகளைக் காணவில்லை. அவை திருடு போயிருந்தன. யாரென்று தெரியாத அழகியின் வனப்பை அவன் வியந்து ரசித்திருந்த சமயத்தில், அவனுடைய இசைக்கருவியையும், தொப்பியையும் தவிர மற்ற எல்லாவற்றையும் யாரோ அயோக்கியன் அபகரித்துச் சென்றுவிட்டான்.

“கயவாளிப் பசங்க! மனுஷங்க எல்லாருமே இப்படி மாறிட்டாங்களே! என்னோட துணி எல்லாம் போயிடுச்சின்னு கூட எனக்குக் கவலையில்லை. ஏன்னா துணி என்னைக்காவது ஒரு நாள் கிழிஞ்சி போயிடக்கூடியதுதான். ஆனா உடம்பில பொட்டுத் துணி இல்லாமப் போறது சமுதாய தர்மத்தை மீறுவது மாதிரியில்லையா?”

இசைக்கருவியை பொதிந்து வைத்திருந்த தோலால் ஆன பெட்டியின் மீது உட்கார்ந்தபடியே அந்த அவலமான நிலையில் இருந்து மீள்வது எப்படி என்று யோசித்தான்.

“பிபுலோவ் சீமான் வீட்டுக்கு அம்மணமாகப் போக முடியாது. அங்கே பெண்கள் இருப்பார்கள். என்னுடைய உடுப்புகளோடு, அவற்றில் இருந்த களிம்புப் புட்டியையும் அந்தப் பாவிப்பசங்க எடுத்துகிட்டுப் போய்ட்டாங்க”.

நீண்ட நேரம் யோசித்ததில் தலைவலிதான் மிஞ்சியது. கடைசியாக ஒரு விஷயம் அவனுடைய நினைவுக்கு வந்தது. ஆற்றங்கரையில் இருந்து சற்றுத் தொலைவில் புதர்களுக்கு நடுவில் பாலம் ஒன்று இருந்தது. “இருட்டும் வரை பாலத்திற்குக் கீழே மறைந்து இருந்துவிட்டு, இரவு வந்ததும் பக்கத்தில் இருக்கிற குடியிருப்புக்குப் போய்விடலாம்….”

அந்த யோசனையோடு, தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு, இசைக்கருவி இருந்த பெட்டியை முதுகில் ஏற்றிக்கொண்டு, புதர்களை நோக்கித் தள்ளாடியபடியே நடந்தான். முதுகில் இசைக் கருவியை சுமந்தபடி நிர்வாணமாக அவன் செல்வதைப் பார்த்த போது, புராணக்கதைகளில் வரும் தேவலோகக் கதாப்பாத்திரம் போலத் தோன்றினான்.

பாலத்தின் கீழே சோகத்தில் மூழ்கியிருக்கும் நம் கதாநாயகனைச் சற்று நேரம் அப்படியே விட்டுவிட்டு, தூண்டில் போட்டுக் கொண்டிருந்த அழகியின் பக்கம் நம் கவனத்தைச் செலுத்துவோம். தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்ட அவள் தூண்டிலின் தக்கை தண்ணீரில் மிதக்காததைக் கண்டு, மீன் மாட்டியிருப்பதாக எண்ணி அவசர அவசரமாகத் தூண்டிலை மேலே இழுத்தாள். தூண்டில் வளைந்ததே ஒழிய மூழ்கியிருந்த தக்கையும் முள்ளும் வெளியே வரவில்லை. ஸ்மிச்கோவின் பூங்கொத்து தண்ணீரில் ஊறிப் புடைத்துக் கனத்துவிட்டது.

பெரிய மீன் ஏதோ மாட்டியிருக்க வேண்டும்; அல்லது தூண்டில் முள் எதிலோ சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் அப்பெண்.

தூண்டிலை இன்னும் சற்று ஆட்டிப்பார்த்த பிறகு, தூண்டில் முள்தான் எதிலோ சிக்கிவிட்டது என்ற முடிவுக்கு வந்தாள்.

“சே! என்ன இப்படி ஆகிவிட்டது! சாயங்கால நேரத்தில மீனெல்லாம் ரொம்பவும் கடிக்குமே, என்ன செய்வது?” யோசித்தாள்.

மேலும் தயங்கிக்கொண்டு இராமல், அந்தத் துணிச்சல்காரி, தான் அணிந்திருந்த அங்கம் தெரியும்படியான பூந்துகில்களைக் களைந்துவிட்டு, வாளிப்பான உடலின் பளிங்கு மாதிரியான தோள்கள் நனையும்வரை ஆற்று நீருக்குள் இறங்கினாள். தூண்டில் கயிற்றோடு சிக்கிக் கொண்டுவிட்ட பூங்கொத்தைப் பிரித்தெடுப்பது சுலபமாக இருக்கவில்லை. எனினும் பொறுமையினால் காரியம் சித்தி ஆயிற்று. சுமார் கால்மணி நேரம் ஆற்றுக்குள் அல்லாடி விட்டுத் தூண்டில் முள்ளைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி முகத்தில் சந்தோஷம் மினுங்கக் கரையேறினாள்.

ஆனால் துரதிர்ஷ்டத்தின் கொடுங்கரங்கள் அவளைப் பற்றிக் கொண்டன. ஸ்மிச்கோவின் உடைகளைக் களவாடிய அயோக்கியர்கள்  அவளுடைய ஆடைகளையும் அபகரித்துச் சென்றுவிட்டனர். தூண்டில் முள்ளில் கோர்ப்பதற்கான புழுக்கள்  இருந்த ஜாடியை மட்டும் விட்டுச் சென்றிருந்தனர்.

“ஐயோ, நான் இப்ப என்ன செய்வேன்?” அழுதாள். “இப்படியே ஊருக்குள் போவதா?. ம்ஹூம், முடியாது. அதைவிட உயிரை விட்டுவிடலாம். ம்.ம்…. இருட்டுகிறவரை இங்கேயே இருந்துவிட்டு, இருட்டிய பிறகு அகாபிஃப்யா வீட்டுக்குப் போய்விடலாம். அவளை வீட்டுக்கு அனுப்பி ஆடைகளை எடுத்துவரச் சொல்லலாம்… இருட்டுகிறவரைக்கும் பாலத்திற்கு அடியில் ஒளிந்து கொள்ளலாம்…”

கோரைப் புல் நீளமாக வளர்ந்து வளைந்து கிடந்த வழியாக நம் கதாநாயகி பாலத்தை நோக்கி ஓடினாள். பாலத்திற்கு அடியில் மெதுவாக ஊர்ந்தபோது, நீண்டு தொங்கிய தலைமுடிகளும், மார்பில் அடந்த முடிக்கற்றைகளும் கொண்ட ஒருவன் அம்மணமாக இருப்பதைப் பார்த்ததும் வீறிட்டு அலறியவள், மயங்கி விழுந்துவிட்டாள்.

ஸ்மிச்கோவும் பயந்துவிட்டான். அவள் ஒரு தண்ணீர்ப் பிசாசு என்று தான் முதலில் நினைத்தான்.

“கடற் கன்னி போல, நதியில் இருக்கும் இந்தக் கன்னி என்னைக் கவர்ந்து செல்ல வந்திருக்கிறதோ?” என்று நினைத்தான். தன்னுடைய புறத்தோற்றத்தைப் பற்றி அவனுக்கு எப்போதுமே அதீத கர்வம் உண்டாதலால், அந்தச் சூழல் அவனை அப்படி யோசிக்க வைத்தது. அவள் நதிக்கன்னியாக இல்லாமல் சாதாரண மனுஷிதான் என்றால் இந்த வினோதமான நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? பாலத்தின் அடியில் ஏன் அவள் வந்தாள்? அவளுக்கு என்ன ஆயிற்று?.

இந்தக் கேள்விகளுக்கு அவன் விடைகாண முயன்றிருந்தபோது, அந்த அழகி மயக்கம் தெளிந்து எழுந்தாள்.

“என்னைக் கொன்றுவிடாதே!” முனகினாள். “பிபுலோவாவின் சீமாட்டி நான். உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என்னை ஒன்றும் செய்துவிடாதே! உனக்கு நிறைய பணம் கொடுக்கச் செய்கிறேன். ஆற்றில் சிக்கிக் கொண்ட என் தூண்டில் முள்ளை எடுக்கத் தண்ணீருக்குள் இறங்கியபோது என்னுடைய துணிகளையும் செருப்பையும் யாரோ திருடன் களவாடிவிட்டான்”.

“அம்மணி”, என்று  நயந்த குரலில் பேசிய ஸ்மிச்கோவ்,” என்னுடைய உடுப்புகளையும் அந்த ஆட்கள் திருடிக்கொண்டு விட்டனர். துணிகளோடு, என்னுடைய டபுள்பேஸின் நரம்புகளில் தடவும் களிம்பு இருந்த புட்டியையும் எடுத்துப் போய் விட்டார்கள்” என்றான்.

பொதுவாக, டபுள்பேஸ் இசைப்பவனும், ட்ராம்போன் வாசிப்பவனும் சமயோசிதமாக நடந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் ஸ்மிச்கோவ் விதிவிலக்காக இருந்தான்.

ஒரு கணம் தயங்கியபிறகு சொன்னான்: “அம்மணி, நான் இருக்கிற நிலையைப் பார்த்து உங்களுக்குச் சங்கடமாக இருக்கும் என்று புரிகிறது. உங்களை மாதிரியே, என்னாலும் இங்கிருந்து போய்விடமுடியாது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; என்னுடைய டபுள்பேஸ்  வைக்கும் தோல் பெட்டிக்குள் புகுந்து கொண்டு மூடிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் பார்வையில் படாமல் நான் இருப்பேன்…”

அப்படிச் சொல்லிவிட்டு, தன்னுடைய டபுள்பேஸை அதன் பெட்டியில் இருந்து வெளியே எடுத்தான். ஸ்மிச்கோவ். அந்தப் பெட்டியை அவளிடம் தரும்போது புனிதமான ஒரு பொருளுக்கு அவமரியாதை செய்வதாக அவன் உணர்ந்தாலும் நீண்ட நேரம் தயங்கி நிற்கவில்லை. அந்த அழகியும் பெட்டிக்குள் புகுந்து சுருண்டு கொள்ள, பெட்டியின் வார்களைத் தளர்வாகக் கட்டியபடியே, இயற்கை இந்த அளவுக்குப் புத்திசாலியாகத்  தன்னைப் படைத்திருக்கிறதே என்று நினைத்துச் சந்தோஷப்பட்டான்.

“அம்மணி, இப்ப நீங்க என்னைப் பார்க்க முடியாது” என்றான்.  “கவலைப் படாமல் அப்படியே இருங்க. இருட்டானதும், உங்கள் பெற்றோரிடம் அப்படியே பெட்டியோடு உங்களைத் தூக்கிக்கிட்டுப் போயிடுறேன். பிறகு வந்து என்னுடைய டபுள்பேஸை எடுத்துக்குவேன்”.

இருள் கவிழ்ந்ததும் அழகி சுருண்டு கிடந்த பெட்டியை முதுகில் ஏற்றிக்கொண்டு, பிபுலோவின் வீடு இருந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனுடைய திட்டம் இதுதான்: முதலில் பக்கத்தில் ஏதாவது குடியிருப்பு இருக்கிறதா என்று பார்த்து அங்கே போய் தன் உடலை மறைக்க ஏதேனும் உடுப்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டுப் பிறகுதான் அவள் வீட்டுக்குப் போவது…

எந்த மாதிரியான சிக்கலிலும் ஏதாவது ஒரு நம்பிக்கைக் கீற்றுத் தெரிந்துவிடுகிறது என்று யோசித்தபடி முதுகுச் சுமையால் சற்றே குனிந்தபடி நடந்தவனின் காலணி இல்லாத கால்கள் புழுதியைக் கிளப்பின. ‘இந்தச் சீமாட்டிக்கு நேர்ந்த அவலத்தைப் போக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பிபுலோவ் சீமான் எனக்குக் கணிசமான வெகுமதிகளைத் தருவார்’.

“அம்மணி, உங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறதா?” ஜோடியாக நடனம் ஆடுவதற்கு ஒரு சீமாட்டியைத் துணிச்சல் மிகுந்த படைவீரன் அழைப்பது போன்ற தொனியில் அவளிடம் வினவினான். “சம்பிரதாய நிகழ்வுகள் போல நாசுக்குப்  பார்க்காதீர்கள். உங்கள் வீட்டில் இருப்பது போல நினைத்துக் கொண்டு பெட்டிக்குள் சௌகரியமாக இருங்கள்”.

திடீரென்று தனக்கு முன்னே இருளில் மறைந்தபடி இரண்டு உருவங்கள் நடப்பது போல அந்த சாகசக்காரன் ஸ்மிச்கோவுக்குத் தோன்றியது. உற்றுப் பார்த்தவன், அவை மாயத் தோற்றங்கள் அல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டான். இரண்டு பேர் தம் கைகளில் மூட்டை போல எதையோ சுமந்தபடி நடந்து கொண்டிருந்தனர்.

“இவர்கள்தான் அந்தத் திருடர்களாக இருப்பார்களோ? அவன் மூளையில் மின்னல் வெட்டியது. “எதையோ எடுத்துப் போகிறார்கள். அநேகமாக எங்களுடைய  உடைகளாகத்தான் இருக்கவேண்டும்”.

முதுகில் இருந்த பெட்டியைத் தரையில் இறக்கிய ஸ்மிச்கோவ் முன்னேசென்ற உருவங்களை நோக்கி விரைந்தான்.

“நில்லுங்கடா!” கத்தினான்.  “ஏய் திருட்டுப் பசங்களா, நில்லுங்கடா”

திரும்பிப் பார்த்த உருவங்கள் யாரோ தொடர்ந்து வருவதைக் கண்டதும், ஓட்டம் எடுத்தன. விரைந்து ஓடும் காலடிச் சத்தங்களும், நில்லுங்கடா சத்தமும் பெட்டிக்குள் இருந்த சீமாட்டிக்கு வெகு நேரத்திற்குக் கேட்டன. பிறகு நிசப்தம்.

ஸ்மிச்கோவ் அந்த உருவங்களை விரட்டிப் பிடிக்க விடாப்பிடியாக ஓடினான். சந்தர்ப்பவசமாக ஒரு நல்ல விஷயம் அப்போது நடந்திருக்கா விட்டால், அந்தச் சாலை ஓரத்தில் பெட்டிக்குள்ளே அந்த அழகி நீண்ட நேரம் முடங்கிக் கிடந்திருப்பாள். அந்தச் சமயத்தில் ஸ்மிச்கோவின் நண்பர்களான புல்லாங்குழல் கலைஞன் ஸூச்கோவும், கிளாரினெட் வாசிக்கும் ராஸ்மாகைகினும், பிபுலோவின் வீட்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த வழியாக வந்தனர். வழியில் கிடந்த பெட்டியைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.

“டபுள்பேஸ்” என்றான் ஸூச்கோவ்”. “நம் தோழன் ஸ்மிச்கோவின் டபுள்பேஸ் இங்கே எப்படி வந்தது?”

“ஸ்மிச்கோவுக்கு ஏதோ ஆகிவிட்டது” என்று தீர்மானத்துக்கு வந்தான் ராஸ்மாகைகின். அவன் மட்டுமீறிக் குடித்துவிட்டு எங்கேயோ கிடக்கவேண்டும், அல்லது, அவனுடைய டபுள்பேஸை யாரோ களவாடியிருக்க வேண்டும். எப்படியானாலும், இந்த வாத்யத்தை இங்கேயே விட்டுவிட்டுப் போவது நியாயமாக இருக்காது. நம்மோடு எடுத்துப் போவோம்”.

ஸூச்கோவ் பெட்டியை முதுகில் ஏற்றிக் கொண்டதும் தோழர்கள் இருவரும் நடையைத் தொடர்ந்தனர்.

“பொணம் மாதிரியில்ல கனக்குது” புலம்பிக் கொண்டே வந்தான் அந்தப் புல்லாங்குழல் கலைஞன். “உலகத்தில் எந்தப் பொக்கிஷத்தைக் கொடுத்தாலும் இதுமாதிரி  சனியன் பிடிச்ச வாத்யத்தை நான் வாசிக்கவே மாட்டேன்…”.

பிபுலோவ் சீமானின் வீட்டுக்குப் போனதும், ஆர்க்கெஸ்ட்ரா நடக்கவிருந்த இடத்தில் பெட்டியை வைத்துவிட்டு, மதுக் கோப்பைகளைப் பரிமாறிக் கொண்டிருந்த பகுதிக்குச் சென்றுவிட்டனர் இருவரும்.

சரவிளக்குகளாலும் வண்ண விளக்குகளாலும் அந்த வீடு ஜொலித்தது. போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரியான நிச்சயதார்த்த நாயகன் எழில்மிகு லக்கேயிச், கோட்டுப் பாக்கெட்டில் கைகளைச் செருகியபடி ஒய்யாரமாக இசை-நடன அரங்கின் நடுவில் நின்று கொண்டு ஸ்காலிகோவ் பிரபுவிடம் உரையாடிக் கொண்டிருந்தான். சங்கீதத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“உங்களுக்குத் தெரியுமா ஸ்காலிகோவ், நேப்பிள்ஸ் நகரத்தில், சங்கீதத்தில் அற்புத வித்தைகளைக் காட்டிய வயலின் கலைஞன் ஒருவனைக் கண்டேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், டபுள்பேஸில் என்னமாதிரி ஜாலம் செய்தான் அவன்! அடடா! ஒரு சாதாரண டபுள்பேஸில், நம்மைச் சொக்க வைக்கும் அசகாய சங்கீதத்தை உருவாக்கினான்!. ஸ்ட்ராஸ் வால்ட்ஸெஸ் சங்கீதத்தை டபுள்பேஸில் வழியச் செய்தான் என்றால் பாருங்களேன்!”.

“ச்சேசே… அதெல்லாம் முடியாது”  என்றான் அந்தப் பிரபு நம்பிக்கை இல்லாத தொனியில்.

“சத்தியமாச் சொல்றேன், அவன் லிஸ்ட் ரப்ஸோடி யைக்கூட வாசித்தான். அவன் தங்கியிருந்த ஓட்டலில்தான் நானும் தங்கியிருந்தேன். டபுள்பேஸில் லிஸிட்ரப்ஸோடியை எப்படி வாசிப்பது என்று எனக்குக் கற்றுத் தந்தான். அவனுக்கு என்னால் பிரதியுபகாரமாக அதைவிட மேலான எதையும் செய்யமுடியாமல் போனது”. (லிஸ்ட் என்ற மகா கலைஞன் உருவாக்கிய ரப்ஸோடி என்ற ஒய்யார நடனத்திற்கான இசையைப் பியானோவில்தான் வாசிக்க முடியும்.)

லிஸ்ட் ரப்ஸோடி..? ம்ம், என்ன நையாண்டி பண்றீங்களா…?”

“உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” கேட்டுவிட்டுச் சிரித்தான் லக்கேயிச். “இப்பவே உங்களிடம் நிரூபித்துக் காட்டுகிறேன். வாங்க ஆர்க்கெஸ்ட்ரா இருக்கிற இடத்திற்குப் போவோம்”.

நிச்சயதார்த்த நாயகனும், அந்தப் பிரபுவும் இசைக் கருவிகள் இருந்த இடத்திற்குப் போனார்கள். டபுள்பேஸ் பெட்டியைக் கட்டியிருந்த வார்களை அவிழ்த்தார்கள்… ஓ அப்புறம் நடந்த ரசாபாசம்….

அந்தச் சங்கீத சம்பாஷணையின் முடிவில் நிகழ்ந்ததைப்பற்றி வாசகர்கள் தம் மனம் போனபடி காட்சிகளைக் கற்பனை செய்துகொள்ள அனுமதித்துவிட்டு, ஸ்மிச்கோவ் நிலை என்ன ஆனது என்று பார்ப்போம். துரதிர்ஷ்டகாரனாகிவிட்ட அந்த இசைக் கலைஞனால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை. பெட்டியை வைத்துவிட்டுப் போன இடத்திற்குத் திரும்பியபோது, விலைமதிப்பில்லாத அந்தச் சுமை காணாமல் போயிருந்தது. ஒன்றும் புரியாதவனாய் அந்தப் பாதையில் முன்னும் பின்னுமாகப் பலதடவை நடந்து தேடித்தேடிப் பார்த்தான். பெட்டியைக் காணாததால், வழி தவறி வேறு பாதைக்கு வந்து விட்டோமோ என்று நினைத்தான்.

“என்ன கொடுமை இது!” என்று  நினைத்தபடியே தலையைப் பிய்த்துக் கொண்டான், ரத்தம் சில்லிட்டது. “அந்தப் பெண் மூச்சுத் திணறுவாளே! ஐயோ, நான் கொலைகாரன் ஆயிட்டேனே!”

மீண்டும் அந்தப் பாதைகளில் பெட்டியைத்தேடி, நள்ளிரவுவரை அலைந்தான். கடைசியாக சோர்ந்து துவண்டு பாலத்திற்கு அடியில் போனான்.

“அதிகாலையில் திரும்பவும் தேடிப்பார்க்கவேண்டும்” தனக்குள் சொல்லிக்கொண்டான். விடியலில் அவன் மேற்கொண்ட தேடுதலிலும் அதே பலன்தான். எனவே இரவாகும் வரை திரும்பவும் பாலத்தின் அடியிலேயே காத்திருக்கத் தீர்மானித்தான்.

“அந்த அழகியை எப்படியாவது கண்டுபிடித்து விடுவேன்”, தொப்பியை அகற்றிவிட்டுத் தலைமுடிக் கற்றைகளை இழுத்துப் பிய்த்தபடியே முணுமுணுத்தான். “ஒருவருஷம் ஆனாலும் அவளைத் தேடிக் கண்டு பிடித்துவிடுவேன்”.

நீண்டு வளர்ந்த சடைமுடியில் தொப்பி அணிந்தபடி நிர்வாணமாக ஒருவன் ராத்திரி நேரத்தில் பாலத்தின் கீழ் இன்னமும் உலவிக்கொண்டிருப்பதாக அந்தப் பகுதியின் விவசாயிகள் சொல்லுகிறார்கள். அவ்வப்போது அந்தப் பாலத்தின் கீழிருந்து டபுள்பேஸ் வாத்தியத்தின் அதிர்வு ஒலியும் அவர்களுடைய காதுகளில் வந்து விழுகிறதாம்.



***

Comments


bottom of page